#NationalFilmAwards-ல் 4 விருதுகளை வென்ற `பொன்னியின் செல்வன் 1' - வாழ்த்து சொன்ன விக்ரம்!
தேசிய விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கு சீயான் விக்ரம் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
இதில் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை (ஏ.ஆர்.ரகுமான்), சிறந்த ஒலி அமைப்பு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி), சிறந்த ஒளிப்பதிவு (ரவிவர்மன்) ஆகிய 4 விருதுகளை 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் வென்றுள்ளது. இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' படக்குழுவுக்கு நடிகர் விக்ரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ரசிகர்களின் அன்பினால் பொன்னியின் செல்வன் படத்துக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழ் வரலாறு, இலக்கியம், பண்பாடு மற்றும் சினிமா ஆகியவை கடந்த காலத்தில் இருந்து இன்று வரை ஒன்றோடொன்று இணைந்துள்ளது. மணிரத்னம், லைகா புரொடக்சன்ஸ், ஏ.ஆர்.ரகுமான், ரவிவர்மன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.