“விஜய் மனதில் பட்ட காயத்தின் வெளிப்பாடுதான் அவரின் பதில்” - கே.பி. முனுசாமி!
கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“அமித்ஷா உடனான சந்திப்பில், தமிழ்நாட்டின் நலன் கருதிய திட்டங்கள் இந்த அரசால் முழுமையாக நிறைவேற்றப்பட முடியாமல் செயலிழந்து இருப்பதால், மக்கள் மீது பற்று கொண்ட அதிமுக, மாநிலத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
மாநில அரசின் தேவைகளையும், நலன்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக டெல்லிக்கு சென்று அமிஷாவை சந்தித்தோம். இதில் எந்தவித அரசியலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதிமுக எப்பொழுதும் ஒரே பார்வையில் சென்று கொண்டிருக்கிறது. எங்களுடைய ஒரே எதிரி திராவிட முன்னேற்ற கழகம். திமுகவை எதிர்த்து களம் ஆட யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கொள்கை ரீதியாகவும், இணக்கமாக செயல்படும் கட்சிகளோடு கூட்டணி வைத்து செயல்பட தயாராக இருக்கிறோம். முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய திராவிட முன்னேற்ற கழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு எத்தனை தொழிற்சாலைகளை கொண்டு வந்து உள்ளது. விஜய் மனதில் பட்ட காயத்தின் வெளிப்பாடுதான் அவரின் பதில்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் விஜய் படம் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எந்த சிரமமும் இல்லாமல் அவருடைய படங்கள் வெளியானது. ஆனால் திமுக ஆட்சியில் அவர் படத்தை வெளியிட மிகவும் சிரமப்பட்டார். அவரின் படத்தை விநியோகம் செய்ய குறிப்பிட்ட நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக விஜயின் மனம் புண்பட்டு உள்ளது.
செய்யும் தொழிலுக்கு இவ்வளவு இடையூறு கொடுக்கிறார்கள் என்று மனம் வெதும்பிய காரணத்தினால் மேடையில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். விஜய்யினுடைய சிந்தனை அரசியல் வெளிப்பாடு அல்ல, நீண்ட காலமாக மனதில் இருக்கும் வருத்தத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். அதன் வெளிப்பாடாக தான் திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே போட்டியென தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.