"வாழும் போதே கடவுளாக இருந்தவர் விஜயகாந்த்" - நடிகர் விஷால்
வாழும் போதே கடவுளாக இருந்தவர் விஜயகாந்த் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிச. 28-ம் தேதி காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரின் மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் பொதுமக்கள் உள்பட பலர், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகர் ஆர்யாவும் சென்றார். அப்போது செய்தியாளிடம் பேசிய அவர், கூறியதாவது:
"நடிகர் விஜயகாந்த் மறைந்த போது என்னால் வரமுடியாதது துரதிருஷ்டவசமானது. விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக நடத்தி இருக்க வேண்டும். விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 19-ம் தேதி சென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெறும்.
இதையும் படியுங்கள்: தொடர்மழையால் 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம் – இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
வாழும்போதே பலருக்கு கடவுளாக இருந்தவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். விஜயகாந்த் பெயரை வைப்பதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். கண்டிப்பாக நடிகர் சங்க கட்டடத்தில் விஜயகாந்த் பெயரும் இடம்பெறும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் நினைவிடத்துக்கு வெளியே 500-க்கும் மேற்பட்டோருக்கு நடிகர் விஷாலும், ஆர்யாவும் அன்னதானம் வழங்கினர்.