”கரூர் சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை விஜய் உணராமல் பேசியுள்ளார் ” - சீமான் விமர்சனம்..!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விருதுநகரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”ஆந்திராவில் செம்மரக்கட்டையை கடத்த வந்ததாக 20 தமிழர்கள் சுட்டு கொன்றார்கள் அன்றைக்கு உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை.? 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற போது யார் சுட்டுக் கொள்ள அதிகாரம் கொடுத்தது என யாருமே கேள்வி எழுப்பவில்லை. தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் அருணா ஜெகதீசன் நடத்திய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. மத்தியில் இருந்து வந்த குழு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை.
இவ்வளவு பேர் செத்து கிடக்கும் போது குஷி படம் மறு வெளியீட்டிற்கு பெண்களும் ஆண்களும் ஆட்டம் போடுவதை நினைக்கும் போது சமுதாயம் எதை நோக்கி செல்கிறது என்ற பதற்றம் வருகிறது.
விஜய் காணொளியை பார்க்கும் போது, அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை, இருந்திருந்தால் அந்த மொழியில் அதனை வெளிப்படுத்தி இருப்பார். கரூர் சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை விஜய் உணராமல் பேசியுள்ளார். விஜய் பேசியபோது வலியை கடத்தி இருக்க வேண்டும். திரைப்படத்தில் கதாநாயகன் பேசும் வசனம் போல் பேசியுள்ளார். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தன் மீது நடவடிக்கை எடுங்கள் தன்னை நம்பி வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜய் கூறி இருக்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கை என கூறி தொடுவதாக இருந்தால் என்னை தொடுங்கள் என பேசியது திரைப்பட வசனம்போல். சிஎம் சார் என கூறுவதே சின்னப் பிள்ளைகள் விளையாட்டிக்கு அழைப்பது போல் இருக்கிறது. அவர் மீது மதிப்பில்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் அமர்ந்திருக்கும் நாற்காலி பெருந்தலைவர்கள் ஓமந்தூரார் ராமசாமி, குமாரசாமி ராஜா, ராஜாஜி , பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றோர் இருந்த இடம். சிஎம் சார் என்றெல்லாம் பேசக்கூடாது, அது தன்மையான பதிவாக இருக்காது, பார்த்து பேச வேண்டும். இதையெல்லாம் பார்க்கும் போது கரூரில் நிகழ்ந்த இறப்பை விட வேதனையை கொடுக்கிறது.
கரூரில் நடந்த சம்பவத்தில் கத்தியால் குத்தினார்கள், தாக்கினார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள், நான் மருத்துவமனையில் சென்று பார்த்த போது அப்படி யாரும் காயமடையவில்லை. இனிவரும் காலங்களில் தெருத்தெருவாக வாக்கு கேட்பது ஊர் ஊராக கூட்டம் போடுவது போன்ற முறைகளை மாற்ற வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளை போல் தேர்தல் பரப்புரைகளை மாற்ற வேண்டும். இந்த பரப்புரை முறைகளை தகர்க்க வேண்டும்” என்றார்.
மேலும் விஜய் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என திருமாவளவனின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு சீமான் பதிலளிக்க மறுத்துவிட்டார்.