சீனாவில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் #Maharaja!
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’ திரைப்படம் வரும் 29ம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மகாராஜா. இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக உருவானது. குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். கடந்த ஜுன் 14ம் தேதி வெளியான இப்படம் ரூ.கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இப்படம் ஓடிடி வெளியீட்டிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியான இந்தியப் படங்களிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 (20 மில்லியன்) கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இதற்கிடையே, மகாராஜா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், நடிகர் அமீர் கான் அதில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகின்ற 29ம் தேதி வெளியிடவுள்ளனர். இந்தப் படத்தை அலிபாபா குழுமம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.