தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த #Vijay!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கொடி அறிமுகம், கட்சியின் பாடல் அறிமுகம், முதல் மாநாடு ஆகியவை நடைப்பெற்றது. ஆனால் கட்சிக்கு மாவட்ட வாரியாக பல நிர்வாகிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை.
கட்சியில் பதவி வகிக்க வேண்டுமானால் ரூ.15 லட்சம் பணம் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. மேலும் இதற்காக வாட்ஸ்அப் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்தும் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.
இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பதவிக்கு பணம் வாங்கினாலோ அல்லது பணம் கொடுத்தாலோ, அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த சூழலில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, நேர்காணல் செய்து 120 நிர்வாகிகளை அறிவித்தார். நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 19 மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் வெள்ளி நாணயத்தை வழங்கினார். அந்த நாணயத்தில் ஒருபக்கம் விஜயின் முகம் பொரிக்கப்பட்டு, அதில் தமிழக வெற்றிக் கழகம் என எழுதப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபக்கம் தவெக கட்சிக் கொடியின் சின்னமும், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" எனவும் பொரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.