"விஜய்க்கு வெளியே வர பயம்.." - அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. தவெக சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
சமீபத்தில், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் கரூர் வருவேன் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அவர் எப்போது கரூர் செல்வார்? என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே, தவெக தலைவர் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தன் மீது குற்றம் இல்லையென்றால், விஜய் தைரியமாக அவரது தோழர்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்றிருக்க முடியும். தன் நெஞ்சே தன்னை சுடுகிற காரணத்தால் அவருக்கு வெளியே வர பயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் வீடியோ காலில் பேசுகிறார்” என்று தெரிவித்தார்.