கரூர் கூட்ட நெரிசலின்போது விஜய் தப்பித்து செல்லவில்லை : உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம்..!
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழ் நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
மேலும் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தது. அத்துடன் கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவையும் அமைத்தது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவும் ஒன்று. இந்த 5 வழக்குகளும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது தவெக தரப்பானது, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் இந்த வழக்கில் விஜய் அல்லது அவரது கட்சியோ எதிர்மனுதாரராக இல்லை. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை கூறி இருக்கிறது. குறிப்பாக இவர் எப்படிப்பட்ட தலைவராக இருக்கிறார் என்பது போன்ற விமர்சனங்களை வைத்திருக்கிறது.
இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற வழக்கில், கரூர் சம்பவம் நடைபெற்றபோது தவெக தலைவர் விஜய் அங்கிருந்து உடனடியாக தப்பித்து சென்றதாக அரசு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். ஆனால் இந்த கூற்று முற்றிலும் தவறானது. கரூர் உயிரிழப்பு சம்பவம் நடந்தவுடன் காவல்துறை தான் தவெக தலைவர் விஜயை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
மேலும் விஜய் காவல்துறை பாதுகாப்புடன்தான் அந்த இடத்திலிருந்து வெளியேறினார். தவெக நிர்வாகிகள் சிலர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்க்க காவல் துறை அனுமதிக்கவில்லை.
இந்த சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனால் அந்த விசாரணை மீது நம்பிக்கை குறைவாகவே உள்ளது உண்மை நிலை வெளியே கொண்டு வர வேண்டும். அதற்காக உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று வாதிட்டனர்.