"விஜய்யால் வெற்றியின் பக்கம் வரமுடியாது, அதை ஒவ்வொரு மாநாட்டிலும் நிரூபிக்கிறார்" - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்!
சென்னை அடுத்த முவரசம்பட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "விநாயகர் சதுர்த்தி விழாக்கள் முலம் மக்களை இணைக்கும் விழாவாக உள்ளது. இந்த விழாக்களை மதம் சார்ந்தது என்பார்கள். ஆனால் கலையை வளர்க்கவும் அன்னதானம், கண் தானம், ரத்த தானம் செய்கின்றனர்.
தமிழகத்தில் ஆன்மீகம் தான் வளர்ந்து ஒங்கும். விநாயகர் சதுர்த்திக்கு வேறு மாநிலங்களின் முதல்வர்கள் வாழ்த்து சொல்கின்றனர். ஆனால் நம் முதலமைச்சர் மட்டும் வாழ்த்து சொல்லாதது தவறு மன்னிக்க முடியாத குற்றம். மக்களுக்கான ஒரு நம்பிக்கை இருக்கும் போது முதலமைச்சர் மதிக்க வேண்டும். தமிழ்நாடு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல பிரச்சனைகள் உள்ளன. ஆனால் முதலமைச்சர் பீகார் சென்று விட்டார். இங்கு பீகார் மக்களை குறை சொல்லி விட்டு அங்கு சென்று உயர்த்தி பேசி இருக்கிறார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வாங்கிய மனுக்கள் எல்லாம் வைகை ஆற்றில் மிதக்கின்றது. தவளையுடன் ஸ்டாலின், மீன்களுடன் ஸ்டாலின் என்று ஆரம்பித்து உள்ளாரோ என தெரியவில்லை. பெயர் அளவிற்கு திட்டங்களை செய்து விட்டு மக்களை பற்றி கவலைப்படவில்லை. தமிழகத்தில் எதிர் கூட்டணி பலமாகி வருகிறது. 8 மாதத்தில் அதிமுக - பாஜக கூட்டணிதான் வெற்றி பெறும். மக்கள் துன்பப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். மோடி எதுவும் செய்யவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் எக்ஸ்பிரஸ் சாலை வசதி முலம் சென்னை - பெங்களூரூ 3 மணி நேரத்தில் இணைக்க கூடிய அதிவேக சாலை உள்ளது.
வந்தே பாரத் 7 வழி தடத்தில் ரயில்கள் செல்கிறது. பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு எல்லா நல்லதும் செய்து வருகிறார். இனி யாரும் ஒன்று செய்யவில்லை என்ற விமர்சனம் எடுப்படாது. தீர்வு காணப்பட்ட மனுகளை ஆற்றில் வீச முடியுமா. அப்போ தீர்வு காணாமல் நிறைய மனுக்கள் உள்ளதா. மக்களை பற்றி கவலைப்படவில்லை. புது பெயர்களை வைத்துவிழா எடுப்பார்கள். விநாயகரை ஆற்றில் கரைப்போம். ஆனால் அவர்கள் மனுக்களை கரைக்கின்றனர்.
விஜய் அரசியலுக்கு வந்து உள்ளார். அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் போட்டி என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான். அடுத்த இடத்திற்கு சீமானும் விஜய்யும் போட்டி போட்டு கொள்ளலாம். விஜய் மாற்று சிந்தனையை சொல்வார் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்.விஜய்காந்த் சேர்த்து இருக்கிறார். இவர்கள் சிந்தனையில் கட்சி நடத்துகிறார்கள். புதிய சிந்தனையில் இல்லாமல் புதிய கட்சி எதற்கு என்று தெரியவில்லை. பவுன்சர் தூக்கி போட்டது யார் என்று விவாதம் நடக்கிறது. பவுன்சர் கலாச்சாரமே தவறு. விஜய்யால் வெற்றியின் பக்கம் வர முடியாது. ஒவ்வொரு மாநாட்டில் நிரூபித்து கொண்டு இருக்கிறார்.
பிரதமர் தமிழகத்திற்கு அடிக்கடி வர வாய்ப்புகள் உள்ளன. 2026ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருப்பார். விநாயகரை கட்டுபடுத்தினால் ஆன்மீகத்தை கட்டுபடுத்த முடியும் என
நினைக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.