சிறையிலிருந்து வீடியோ காலில் பேசிய நடிகர் #Darshan -இணையத்தில் வைரல்!
கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன், பெங்களூரு சிறையில் இருந்தவாறு விடியோ காலில் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, அண்மையில் சிறையில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி கோப்பை மற்றும் சிகரெட் உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. அவருடன் மூன்று பேர் அப்போது அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அது பலருக்கும் அதிர்ச்சி தந்த சூழலில் தற்போது வீடியோ காலில் தர்ஷன் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள் : மலையாள திரையுலகை ஆட்டுவிக்கும் பாலியல் புகார் – பிரபல தயாரிப்பாளர் #Baburaj மீதும் குற்றச்சாட்டு!
சுமார் 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் தர்ஷன் வெளிச்சமான ஒரு அறையில் அமர்ந்துள்ளார். அந்த வீடியோவில் புன்னகை பொங்க தர்ஷன் பேசியுள்ளார். பதிலுக்கு மறுமுனையில் இருப்பவரும் தர்ஷனின் உடல்நிலை, வசதிகள் குறித்து கேட்டறிகிறார். இந்த விடியோ உண்மையா? அல்லது பழைய விடியோவா? என்பது தொடர்பாக உரிய விசாரணை நடத்த காவல் துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.