துணை குடியரசுத் தலைவர் தேர்தல் - வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று ஆலோசனை!
நாட்டின் துணை குடியரசு தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21 தேதி திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமானது துணை குடியரசு தலைவர் பதவி தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது. மேலும் தேர்தல் அட்டவணையையும் கடந்த 7ம் தேதி வெளியிட்டது. அதன்படி புதிய துணை குடியரசு தலைவரை தேர்வு செய்ய செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதனிடையே துணை குடியரசு தலைவர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் காண்கிறார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமானது காங்கிரஸ் கட்சி தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கேவின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் மதியம் 12:45 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.