வேங்கைவயல் விவகாரம்: “2 ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படாதது ஏன்?” - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு குற்றவாளியை கூட கைது செய்யாதது ஏன்? என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருப்பதாக கடந்த 2022 டிசம்பர் 26-ம் தேதி தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி ராஜ்கமல் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்தது. அப்போது, “இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, “புலன் விசாரணை முன்னேற்ற நிலையில் உள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும் உடனடியாக கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், “2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யாதது ஏன்? மனிதாபிமானமற்ற முறையில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக அறிக்கைகளை மட்டும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது. இரண்டு வாரங்களில் தீர்க்கமான முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.