Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

04:24 PM Sep 12, 2024 IST | Web Editor
Advertisement

ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை புகாரில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

சிறைத்துறை விதிகளை மீறி ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்தி
சித்ரவதை செய்ததாக வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்பி உட்பட
14 பேர் மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு
செய்தனர்.

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம், மாணிக்கம் கோட்டையைச் சேர்ந்த சிவகுமார். இவரை வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்டோர் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இதனிடையே டிஐஜி வீட்டில் ரூ.4.5 லட்சம் மாயமானது. கைதி சிவகுமார் தான் இந்த பணத்தை எடுத்து இருப்பார் என்று அவரை கடுமையாக தாக்கியதாகவும், தனிமை சிறையில் அடைத்து, சிறைத்துறை ஜெயிலர் மற்றும் காவலர்கள் சித்ரவதையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆயுள் தண்டனை கைதி சிவகுமார், தன்னை பார்க்க வந்த தாய் கலாவதியிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து கலாவதி, வழக்கறிஞர் புகழேந்தி மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாருக்கு
உத்தரவிட்டனர். அதன்படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், டிஐஜி ராஜலட்சுமி
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஆயுள் தண்டனை கைதி சிவகுமாரை வீட்டு வேலைக்கு
ஈடுபடுத்தியது தெரிய வந்தது. தமிழ்நாடு சிறைக் கையேட்டின் 447வது விதியின் படி, தண்டனை கைதிகள் யாரையும் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளியே அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த விதியை டிஐஜி ராஜலட்சுமி மற்றும் வேலூர் சிறை கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான் ஆகியோர் மீறியுள்ளனர்.

டிஐஜி வீட்டில் மாயமான ரூ.4.5 லட்சத்தை ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் திருடியதாக,
அவரை 95 நாட்கள் தனிமை சிறையில் அடைத்து வைத்து, வேலூர் சிறை ஜெயிலர் அருள்குமரன், டிஐஜி பாதுகாப்பு அதிகாரி ராஜூ என 8 ஆண் சிறை காவலர்கள், 2 பெண் சிறை காவலர்கள் சேர்ந்து கொடுமைப்படுத்தியதும் சிபிசிஐடி விசாரணையில் உறுதியானது.

அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது பிஎன்எஸ் 146, 127(8), 118(2), 115(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து டிஐஜி, கூடுதல் எஸ்பி, ஜெயிலர் உட்பட 14 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை பாயும் என உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வேலூர் சிறைத்துறை சரக டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சரக சிறைத்துறை டிஐஜி முருகேசன் வேலூர் டிஐஜியாக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். மேலும் வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் ரகுமான் புழல் சிறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
Next Article