தந்தையின் சமாதியில் வேட்புமனுவை வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்ட வீரப்பனின் மகள்!
நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வீரப்பனின் மகள் வித்யாராணி, தனது தந்தையின் சமாதியில் வேட்புமனுவை வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 முதல் தொடங்கியுள்ளது.
மகளிருக்கு 50 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில், 20 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 20 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரையும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பனின் மகள் வித்யாராணி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வீரப்பனின் மகள் வித்யாராணி இன்று (மார்ச்.25) வேட்புமனுத் தாக்கல் செய்தார். முன்னதாக மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் வீரப்பனின் சமாதியில் அவரது வேட்பு மனுவை வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். வீரப்பனின் மூத்த மகளான வித்யா ராணி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அப்போது, அவருக்கு ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.