“வெற்றிமாறன், சுசீந்திரன், போஸ் வெங்கட் வரிசையில் இரா.சரவணன்” - நந்தன் படத்தை பாராட்டிய #VCK வன்னி அரசு!
சாதிய கட்டமைப்புக்கு எதிராக களமாடி வரும் இயக்குநர்கள் வெற்றிமாறன், சுசீந்திரன், போஸ் வெங்கட் போன்றோர் வரிசையில் இரா.சரவணனும் இணைந்துள்ளதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி நடிகராக இருந்த சசிகுமார் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு அவர் தேர்வு செய்த கதைகளே காரணம் என சொல்லப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் அவர் படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில் அயோத்தி என்ற படத்தின் மூலம் மீண்டும் நம்பிக்கைக் கொடுக்கும் நடிகராக மாறியுள்ளார்.
இதையடுத்து அவர் இப்போது உடன்பிறப்பே இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் ‘நந்தன்’ என்ற அழுத்தமானக் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆனது. ரிலீஸுக்கு முன்பே இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு படத்தைப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில்,
“நந்தன் திரைப்படத்தை படைத்த படைப்பாளி இரா. சரவணனின் இந்த துணிச்சலான முன்னெடுப்புக்கு முதலில் பாராட்டுகள். அன்று சனாதனக்கும்பலால் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டான் நந்தன். இன்றோ அதிகாரத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறான் நந்தன். அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி அதிகாரம் மறுக்கப்பட்ட சமூக கட்டமைப்பு அப்படியே இருப்பதையும் அதை தகர்க்க நந்தன்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதையும் அழுத்தம் திருத்தமாகவும் அதே வேளையில் சமரசமில்லாமல் சொல்லியுள்ளார் இயக்குநர். அதிகாரத்துக்காக கொலையும் செய்வார்கள் சாதி இந்துக்கள் என்பதை அப்படி அப்படியே அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.
எப்படியெல்லாம் தலித்துகளை பயன்படுத்துகிறார்கள்; ஏமாற்றுகிறார்கள் என்பதை சமூக கட்டமைப்பின் குரலாகவே ஒலித்துள்ளார் இயக்குநர். எப்போதும் அரிவாளும் கையுமாகவே காட்டப்பட்ட சசிக்குமார் இத்திரைப்படத்தில் அம்பேத்குமார் எனும் தலித்தாகவே வாழ்ந்துள்ளார். தலித்துகளின் வலியையும் வேதனையையும் அப்படியே காட்டியுள்ளார். அம்பேத்குமாரின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ருதி பெரியசாமி அவர்களின் அந்த கோபமும் ஏக்கமும் சேரிப்பெண்களின் ஆதங்கமாகவே இருந்தது. அதே போல இயக்குனர் பாலாஜி சக்திவேல் அதிகாரத்தை விட மறுக்கும் அதிகார வெறிபிடித்த கோப்புலிங்கமாகவே மாறி சாதி வெறியாட்டம் போட்டுள்ளார்.
காலம் காலமாக சாதி இந்துக்களே ஊராட்சி மன்றத்தலைவராக இருந்து பழக்கப்பட்ட இடத்தை திடீரென தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டால் என்ன எதிர்வினை ஏற்படும்? சாதியவாதிகள் எப்படியெல்லாம் சாதிவெறியோடு அந்த தலைவர் பதவியை பயன்படுத்துகிறார்கள் என்பது தான் கதை. சிக்கலான அதே நேரத்தில் மிக கவனமாக கையாள வேண்டிய கதையை நேரடியாக எந்த சமரசமும் இல்லாமல் சாதியத்துக்கு எதிராக இறங்கியுள்ளார் இயக்குநர் இரா.சரவணன். தலித் அல்லாத சமூகத்தில் பிறந்து சாதிய கட்டமைப்புக்கு எதிராக களமாடி வரும் இயக்குநர்கள் வெற்றிமாறன், சுசீந்திரன், போஸ் வெங்கட் போன்றோர் வரிசையில் இரா.சரவணனும் இணைந்துள்ளார்.
சாதிப்பெருமைகளை போட்டு அடித்து உடைத்துள்ளார். ஆளுவதற்காக தான் அதிகாரம் தேவைன்னு இருந்தோம்; இப்ப வாழ்வதற்காகவே அதிகாரம் தேவைப்படுது என்பதை வலிமையாக காட்சிப்படுத்தியுள்ளார். அம்பேத்குமாராக வாழும் சசிக்குமாரும் கோப்புலிங்கமாக ஆடும் பாலாஜி சக்திவேலும் போட்டி போட்டு கொண்டு நடித்துள்ளார்கள். இன்றைக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசியக்கொடி ஏற்ற முடியாத அவலம் தொடர்வதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குநர். நந்தன் இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க வெளியாகிறது. சமூக மாற்றத்தை விரும்பக்கூடிய எல்லோரும் காண வேண்டிய திரைப்படம். திரைப்படக்குழுவினருக்கு அன்பின் முத்தங்கள்”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.