குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்த சிறுவன் வஉசி கொள்ளுப்பேரன்!
குற்றால வெள்ளத்தில் இறந்த சிறுவன் வஉசி கொள்ளுப்பேரன் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.தென்காசி மாவட்டத்தில் 19ம் தேதி வரையிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாக குளித்தனர்.
இதையும் படியுங்கள் : கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலர் கண்காட்சி – சுற்றுலா பயணிகள் பார்வையிட கூடுதல் நேரம்!
இந்நிலையில், மதியம் 1 மணியளவில் பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளித்த சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர். மேலும், அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் வேகமாக வெளியே ஓடி வந்தபோது, அவர்களில் நெல்லை ஸ்ரீராம்நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் அஸ்வினை (வயது 17) காணாததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வெள்ளத்தில் சிக்கி மாயமான அஸ்வினை உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர். இதுகுறித்து குற்றாலம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா, உதவி அலுவலர் பிரதீப் குமார், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அருவி பகுதியில் இருந்து சுமார் 500 அடி தூரத்தில் ஒரு பாறையின் அருகில் அஸ்வின் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அஸ்வினின் உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு அஸ்வினின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலர் கண்காட்சி – சுற்றுலா பயணிகள் பார்வையிட கூடுதல் நேரம்!
உயிரிழந்த அஸ்வினின் தந்தை குமார் சேலத்தில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.மேலும், அஸ்வின் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். மேலகரத்திற்கு தனது உறவினர் வீட்டிற்கு அவர் வந்திருந்தபோது பழைய குற்றாலத்தில் குளிக்க சென்றிருந்தார். அப்போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. போலீசார் விசாரணையில் மாணவன் அஸ்வின் சுதந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழனுமான வ. உ.சிதம்பரனாரின் கொள்ளு பேரன் என்பது தெரியவந்துள்ளது.