வன்னியர் மகளிர் பெருவிழா - 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
சீர்காழி அருகே பூம்புகாரில் பாமக சார்பில் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் சரஸ்வதி ராமதாஸ், ஸ்ரீகாந்தி, சுகந்தன், வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முதல் தீர்மானத்தை ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி வாசித்தார்.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு மகளிர் தீர்மானம் வாசித்தனர். இவற்றில் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் வேண்டும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும். பெண்கள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை, முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் தடையின்றி விற்பதால் மாணவர்கள் இளைஞர்கள் பாதிக்கப்படுவதால் கஞ்சா விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்,
வன்னியர்களுக்கு 10.5 சதம் இடஒதுக்கிடு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், உள்ளிட்ட 14 தீர்மானங்கள் ராமதாஸ் முன்னிலையில் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில், "கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த பிரதமர் மோடி தந்தையை மிஞ்சிய தனையன் இருக்கக்கூடாது எனக் கூறி உதாரணமாக கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை சொன்னார்.
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தமிழகத்தில் உள்ள 320 சமுதாயங்களின் மக்களின் நிலை தெரியவரும். அதனை செய்ய தமிழக முதல்வர் ஏன் தயங்குகிறார்? மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கருணாநிதி கொடுத்தார். அதனால் 108 சமூதாய மக்கள் பயன்பெற்றனர். தந்தையை மீறிய தனயனாக நீங்கள் (தமிழக முதல்வர்) சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஏன் தயக்கம்? அதனை செய்து சமூக சரித்திரத்தில் இடம்பெற வேண்டுமென்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களை அந்த அளவுக்கு கொண்டு செல்லாதீர்கள். மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் உணர்வோம். அதனால் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மது, கஞ்சா விற்பனையை தடுக்க மக்கள் முனைப்பாக இருக்க வேண்டும். அப்படி விற்பனை செய்தால் போராட்டம் செய்யுங்கள். என்னை கூப்பிட்டாலும் நானும் கலந்துகொள்வேன். மது, கஞ்சா விற்பனை செய்பவர்களை பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். போதை பொருள் பழக்கத்துக்கு ஆட்படாமல் பெற்றோர்களும் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். 2026- ல் நீங்கள் நினைக்கும் வகையில் வெற்றிக்கூட்டணி அமைப்பேன். வேறு யார் எது சொன்னாலும் நீங்கள் காதுகொடுத்து கேட்க வேண்டியதில்லை நான் சொல்வதுதான் நடக்கும் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வரும் 17-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து, கருத்துகளை கேட்டறிந்து கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.