வரும் 30-ந் தேதி முதல் கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை!
டிச. 30-ம் தேதி முதல் கோவை - பெங்களூர் இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
வந்தே பாரத் ரயில்கள் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டில் சென்னை- திருநெல்வேலி, சென்னை-மைசூரு, சென்னை-கோவை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவை-பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என தொழில் அமைப்புகள், ரயில் பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து டிச.30-ம் தேதி முதல் கோவை-பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்: எண்ணூர் பகுதியில் நேர்ந்த அடுத்த சுற்றுச்சூழல் பாதிப்பு! அமோனியா வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் அவதி!
இந்த நிலையில் கோவை - பெங்களூரு இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின் உள்ளிட்டவைகள் கோவை ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தன. இந்த ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின் உள்ளிட்டவைகளை சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலை தயாரித்துள்ளது.
இதுகுறித்து கோவை ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவைக்கு 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் ஒரு சொகுசு பெட்டியில் 52 இருக்கைகளும், மற்ற 7 பெட்டிகளில் தலா 78 இருக்கைகளும் உள்ளன. செகுசுப் பெட்டியில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.1,850-ம், மற்ற பெட்டிகளில் ஒருவருக்கு ரூ.1000 வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம். இந்தக் கட்டணத்தில் காலை உணவும் அடங்கும் என்றார்.
இந்த ரயில் கோவை ரயில் நிலையத்தில் காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையத்தை அடையும். கோவை-பெங்களூர் இடையே 380 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. இந்த தொலைவை அடைய மற்ற ரயில்களில் 7 மணி நேரம் வரை ஆகும். ஆனால், வந்தே பாரத் ரயில் 5 மணி நேரத்தில் சென்றடையும் என்று தெரிவித்தார்.