வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கு - #MadrasHighcourt சரமாரி கேள்வி!
வடலூர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வடலூர், வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ”ரூ.99 கோடி செலவில் அமைக்க உள்ள சர்வதேச வள்ளலார் மையத்துக்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, நகரமைப்பு திட்ட அனுமதி உள்ளிட்ட அனைத்தும் பெறப்பட்டுள்ளன” எனக் கூறி, அதுதொடர்பான மனுவை தாக்கல் செய்தார்.
சர்வதேச மையம் கட்டிக்கொடுத்து சத்திய ஞான சபையை அரசு எடுத்துக்கொள்ள போவதாக மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச மையம் கட்டப்பட்டு, மீண்டும் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், காலி நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அடிக்கல் நாட்டும் பணிகள் துவங்கிய போது, அந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்பட்டதை அடுத்து, தொல்லியல் துறை குழுவினர் அந்த நிலத்தை ஆய்வு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ஜோதி தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வதில் என்ன ஆட்சேபம் உள்ளது? அதன் மூலம் பக்தர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படுகிறது? என மனுதாரர்கள் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, “வள்ளலார் திருவருட்பா பாடல்களில் ஜோதி தரிசனத்துக்காக பெருவெளியை அப்படியே வைத்திருக்க வேண்டும். எனவே நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்யலாம். வேறு இடத்தில் சர்வதேச மையம் கட்டலாம். 100 ஆண்டுகளுக்கும் பழமையான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோயில் என்பதால் அதை பாதுகாக்க வேண்டும்” என விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து, இதுவரை இந்த இடத்தை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்காத நிலையில் எப்படி ஆட்சேபம் தெரிவிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு தலைமை வழக்கறிஞர், “கோயில் புராதன சின்னம் தான். அதனை அரசு தொடப்போவதில்லை. ஆனால் நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததா என, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசு நியமித்த நிபுணர்குழு ஆய்வு செய்தது. அந்த குழு, நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என அறிக்கை அளித்துள்ளது” என தெரிவித்தார்.
தொல்லியல் துறையால் உயர்நீதிமன்றத்திலும் கூட மேம்பாட்டு பணிகளை துவங்க முடியவில்லை என தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை ஆய்வு செய்து, நூறு ஆண்டுகள் பழமையானவை என கண்டறிந்தால் அவற்றை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தொல்லியல் துறை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். வழக்கில் வாதங்கள் நிறைவு பெற்றதால் விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.