சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புவதாக தவெக மீது வைஷ்ணவி புகார்!
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி (20) சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் செயலியில் பிரபலமாக இருந்தவர். ஆரம்ப காலத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் தவெகவை ஆதரித்து கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பெற்று வந்தார். பின்னர் தமிழக வெற்றி கழகத்திலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார். அப்போதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின்தொடர்ந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வைஷ்ணவி, சமூக வலைதளங்களில் தவெகவினர், தன் புகைப்படத்தை பயன்படுத்தி அவதூறாக, மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் . ”சமூக வலைதள பக்கங்களில் தவெகவினரின் செயல்பாட்டை விஜய் கண்டிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. virtual warriors என்று அழைக்கப்படும் விஜயின் கட்சியினர் அரசியலுக்கு வரும் இளம் பெண்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் நடந்து கொண்டு வருகின்றனர்” எனவும் தெரிவித்தார்.
மேலும் விஜய் மற்றும் தவெக கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட வைஷ்ணவி, சமூகவலைதளங்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி போடப்பட்ட மீம்ஸ் மற்றும் புகைப்படங்கள் உடன் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.