Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழீழ இனப்படுகொலைக்கு மே 18 இல் நினைவு அஞ்சலி - வைகோ அழைப்பு!

மே 18 இல் தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவஞ்சலி செலுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
10:37 AM May 15, 2025 IST | Web Editor
மே 18 இல் தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவஞ்சலி செலுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
Advertisement

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

Advertisement

"உலக வரலாற்றில், உலகின் பல இடங்களில் நடைபெற்ற இனப்படுகொலைகளில் 2009 ஆம் ஆண்டில் இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாத அரசு உலக வல்லரசு நாடுகளிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்களை வாங்கிக் கொண்டு முப்படைகளையும் ஏவி கோரமான தமிழீழ இனப்படுகொலை நடத்தியது. அதில் தமிழர்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைக்கும்போதே நமது நெஞ்சம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது.

வரலாற்றின் வைகறை காலத்திலிருந்தே அந்தத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், மற்ற இடங்களிலும் வாழ்ந்த தமிழர்கள் இறையாண்மை உள்ள போற்றத்தக்க அரசை நடத்தி வந்தனர். நாகரிகத்தில், பண்பாட்டில், படை வலிமையில் சிறந்து விளங்கினர். போர்த்துக்கீசியர்கள் 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின் தங்கள் படை பலத்தோடு வந்து தமிழீழத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். சில போர்களில் தோல்வியும் அடைந்தனர். அதன்பின் டச்சுக்காரர்கள் படைகளோடு வந்து போர்த்துக்கீசியர்களைத் தோற்கடித்து, தமிழீழத்தின் வடக்குப் பகுதியில் ஆளத் தொடங்கினர். பின்னர், பிரித்தானியப் பேரரசு பெரும் படைகளுடன் வந்து, போர்த்துக்கீசியர்களைத் தோற்கடித்து, சிங்களர்கள் வாழும் பகுதியையும், ஈழத்தமிழர்கள் வாழும் பகுதியையும் கைப்பற்றி ஆட்சி புரியத் தொடங்கினர்.

பிரித்தானிய அரசின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ஈழத்தமிழர்கள்தான் தந்தை செல்வா தலைமையில் தியாகங்கள் செறிந்த அறப்போராட்டத்தை நடத்தினர். காலிமுகத் திடலில் தமிழர்கள் உண்ணாநிலை அறப்போர் மேற்கொண்டபோது, சிங்கள இராணுவமும், சிங்கள காவல்துறையும் அறப்போரில் ஈடுபட்ட தமிழர்களை துப்பாக்கி முனையில் வேட்டையாடினர். தமிழர்களின் தலைகளைப் பிளந்தனர். தங்களின் சுதந்திர உரிமையை மீண்டும் பெறுவதற்காக தந்தை செல்வா தலைமையில் ஈழத்தமிழர்கள் போராடிக் கொண்டே 1957 இல் சிங்களர் - தமிழர் சமாதான ஒப்பந்தம் போட்டனர். தந்தை செல்வாவும், பண்டார நாயகாவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஆனால், ஒப்பந்தத்தின் மை காய்வதற்குள் அதற்கு விரோதமாக சிங்கள அரசு ஒப்பந்தத்தைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசியது. பூர்வீகத் தமிழர்கள் பகுதியில் இராணுவம், காவல்துறை உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். சிங்களவனின் விமான குண்டு வீச்சுக்கும், பீரங்கி தாக்குதலுக்கும் ஆளான ஈழத் தமிழினம் கண்ணீர் சிந்தியது, இரத்தம் சிந்தியது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள்.

ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்த தந்தை செல்வா, சுதந்திரத் தமிழீழம் என்ற முழக்கத்தை முன்வைத்து காங்கேசன் துறை இடைத் தேர்தலில் போட்டியிட்டு 90 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். நாடாளுமன்றத்தில் தமிழீழ உறுப்பினர்கள் சுதந்திர இறையாண்மை உள்ள தமிழீழ கோரிக்கையை முன்வைத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

தமிழர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது. 1965 இல் சிங்கள அதிபர் சேனநாயகா - தந்தை செல்வா ஒப்பந்தம் என இரண்டாவது சமாதான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் சிங்களர்கள் கிழித்து எறிந்து, தமிழர்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்தனர்..

1972 இல் வல்வெட்டித் துறையில் 16 வயதே நிரம்பிய பிரபாகரன் புதிய புலிகள் என்ற புரட்சிப் படையை நிர்மாணித்தார். புதிய புலிகள் சிங்கள இராணுவத்தையும், காவல்துறையையும் எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.
1974 ஜனவரி 10 இல் ஈழத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்றவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றது. 1976 மே 14 ஆம் தேதி, தந்தை செல்வா அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் ஒன்றாக இணைத்து வட்டுக்கோட்டை பண்ணகம் எனும் இடத்தில் மாநாட்டைக் கூட்டி, சுதந்திர இறையாண்மை உள்ள தமிழீழ தேசத்தை கட்டியெழுப்புவதற்கு ஈழத்து இளைஞர்கள் சர்வபரி தியாகத்திற்கும் ஆயத்தமாக முன்வர வேண்டும் என பிரகடனம் செய்தார். இங்கிலாந்து நாட்டின் மேக்னா கார்ட்டா போல வட்டுக்கோட்டை விடுதலைப் பிரகடனம் ஈழத்தமிழர்கள் உயிர்மூச்சுக் கோரிக்கையாயிற்று.

ஆனால், சிங்கள பேரினவாத அரசு ஈழத்தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதலை தொடர்ந்துகொண்டே இருந்தது. 1983 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் ஆயுள் கைதிகளாக இருந்த சிங்களக் கைதிகளின் கைகளில் அரிவாள், கோடரி போன்ற ஆயுதங்களைக் கொடுத்து சூலை 23 ஆம் தேதி கோரமான ஒரு படுகொலையை நிகழ்த்தினர். குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 53 வீரத் தமிழ் இளைஞர்களை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றனர்.

அங்கிருந்த புத்தர் சிலைக்கு முன்பாக ஓரடி உயரத்திற்கு தமிழர்கள் இரத்தம் பரவிக் கிடந்தது. தமிழர் பகுதிகளான வடக்கு, கிழக்கு, ஏன் கொழும்பு தலைநகரிலும் தமிழர்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்திக் கொன்றனர். அந்தக் காலகட்டத்தில் இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு அரணாக எழுந்து பாதுகாக்க முனைந்தார். ஆனால் 1984 ஆம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி அவரது மெய்க்காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தமிழ்நாட்டில் கருணாநிதியும், முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உறுதியாக நின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் 1987 ஜூலையில் புலிப்படைத் தலைவர் பிரபாகரனிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து டெல்லிக்கு அழைத்து வந்து, அசோகா ஹோட்டலில் சிறை வைத்தனர். இந்தியாவும் - இலங்கையும் சேர்ந்து ஒரு ஒப்பந்தம் போடப்போகிறோம். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் தீர வேண்டும். நீங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தினர். ஏமாற்றமும், வேதனையும் அடைந்தார் பிரபாகரன்.

ஜூலை 29 இல் கொழும்பு நகரில் ராஜீவ்காந்தியும், ஜெயவர்த்தனாவும் ஒப்பந்தம் போட்டபின், பிரபாகரனை இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். 1987 ஆகஸ்ட் 4ஆம் தேதி சுதுமலை பொதுக்கூட்டத்தில் “இந்திய வல்லரசு எங்கள் மீது இந்த ஒப்பந்தத்தைத் திணித்துவிட்டது. இந்த ஒப்பந்தத்தை சிங்கள இனவாத பூதம் விரைவில் விழுங்கிவிடும். எங்களை பாதுகாப்பது இந்தியாவின் தார்மீகக் கடமை” என்று பிரபாகரன் முழங்கினார்.

அக்டோபர் 5 ஆம் தேதி, புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 விடுதலைப் புலி தளபதிகள் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டதால், நச்சுக் குப்பிகளைக் கடித்து மாண்டனர். அதன்பின்னர் விடுதலைப் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் மோதல் ஏற்பட்டது. 1989 இல் வி.பி.சிங் இந்தியப் பிரதமரானார். இந்திய அமைதிப் படையை இந்தியாவுக்கு திரும்ப ஆணையிட்டு செயல்படுத்தினார். சிங்கள இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் தொடர்ந்துகொண்டே இருந்தது. வன்னிக் காடுகளுக்குள் இருந்துகொண்டே கொரில்லா யுத்தத்தை புலிகள் நடத்தினர்.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு யுத்தத்தில் 25 ஆயிரம் சிங்களப் படையினரை மூன்றாயிரம் விடுதலைப் புலிகள் தோற்கடித்து விரட்டியதைக் கண்டு உலகமே அதிசயித்தது. அதன்பின் 2000 டிசம்பர் 24 ஆம் தேதி, விடுதலைப் புலிகள் தாங்களாகவே 30 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்தனர். 2001 ஜனவரி 24 அன்று மேலும் 30 நாட்களுக்கு புலிகள் போர் நிறுத்தம் அறிவித்தனர். வேறு வழியின்றி சிங்கள அரசும் போர் நிறுத்தம் அறிவித்தது. ஆனால் சிங்கள அரசு, வல்லரசு நாடுகளிலிருந்து ஏராளமான ஆயுதங்களைப் பெற்றது.

2003 ஆம் ஆண்டில் இருதரப்பு பேச்சுவார்த்தையை நார்வே அரசு அறிவித்தது. மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் சந்திரிகா குமாரதுங்கா பேச்சுவார்த்தையைச் சீர்குலைத்து பெரும் தாக்குதலுக்கு சிங்கள இராணுவத்தை ஏற்பாடு செய்தார்.

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வலிமை பொருந்திய நவீன ஆயுதங்களையும், உலகம் ஏற்கனவே தடை செய்துள்ள ஆயுதங்களையும் பெற்று விடுதலைப் புலிகளை போர்க்களத்தில் தோற்கடிக்க முடிந்தது. இது மட்டுமின்றி, ஆயுதம் ஏந்தாத அப்பாவி தமிழர்களை பட்டினிபோட்டுச் சாகடித்தது. சேனல்-4 தொலைக்காட்சி சிங்கள இராணுவம் நடத்திய கோரமான படுகொலைகளை உலகின் பார்வைக்கு முன்னால் நிறுத்தியது. புலிகளின் வானொலி செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை 16 சிங்கள இராணுவத்தினர் கற்பழித்து, மிகக் கொடூரமான முறையில் சாகடித்த காட்சியும், எட்டு ஈழத் தமிழ் இளைஞர்களின் கைகளை கயிற்றால் கட்டி, கண்களையும் துணியால் கட்டி நிர்வாணமாக மண்டியிட வைத்து உச்சந் தலையில் சுட்டுக் கொன்றனர். இதனையும் சேனல்-4 தொலைக்காட்சி உலக நாடுகளுக்கு நிருபித்தது.

ஏழு நாடுகளின் இராணுவ உதவியால், அவைகள் தந்த ஆயுதங்களால் விடுதலைப் புலிகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததுடன், எண்ணற்ற தமிழ்ப் பெண்களை மானபங்கம் செய்து கற்பழித்து கொலை செய்தனர். பன்னாட்டு ஆயுத பலத்தால் 2009 மே 17, 18 தேதிகளில் விடுதலைப் புலிகள் எங்கள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்கிறோம் என்று கூறியும் வஞ்சகமாக விடுதலைப் புலி தளபதிகளைக் கொன்றது.

இந்தப் போரில் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி யுத்த களத்தில் கடுமையாகப் போரிட்டு, சிங்களப் படையால் கொல்லப்பட்டார். தலைவர் பிரபாகரனும், அவரது துணைவியும், மகளும் என்ன ஆனார்கள் என்பது இன்று வரை தெரியவில்லை. ஆனால், தலையில் குண்டடி பட்டு பிரபாகரன் தோற்றத்தில் இருந்த ஒரு சடலத்தை தொலைக்காட்சிகளில் காட்டி, புலிகளின் தலைவரைக் கொன்றுவிட்டோம் என்று சிங்கள அதிபர் கொடியவன் ராஜபக்சே உலகுக்கு அறிவித்தான்.

பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை சிங்கள இராணுவத்தினர் படுகொலை செய்தனர். தற்போது தமிழர் தாயகத்தில் 90 ஆயிரம் இளம் விதவைகள் இருக்கிறார்கள். ஐநா சபை தலைவராக இருந்த பான் கி மூன், இலங்கைத் தீவில் நடைபெற்ற படுகொலைகளைப் பற்றிய ஆராய மார்சுகி தாரீஸ்மென் தலைமையில் ஒரு குழுவை ஐ.நா. சார்பில் அனுப்பினார். அந்தக் குழுவினர் தங்களது அறிக்கையில், ஒரு லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரமாயிரம் இளம் பெண்கள், தாய்மார்கள் பாலியல் கொடுமைகளால் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் நிலவரம் இப்படி இருக்க, தமிழகத்தில் 2009 ஜனவரி 29 ஆம் தேதி அன்று சென்னை கொளத்தூரில் வசித்து வந்த முத்துக்குமார், மத்திய வருமானவரித்துறை அலுவலத்திற்கு முன்பு தலை முதல் கால் வரை பெட்ரோலை ஊற்றி நெருப்பை படற வைத்து, தமிழக இளைஞர்களும், மாணவர்களும் ஈழத்தமிழர்களைக் காக்க வேண்டும். தீக்குளித்து கருகிப்போன என் உடலை அதற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற மரண சாசனத்தை தன் அருகிலேயே போட்டுவிட்டு, தீயின் தணலுக்கு இரையானான். வரிசையாக 19 தமிழர்கள் தீக்குளித்து மடிந்தனர்.

முருகதாஸ் என்ற ஈழ இளைஞர், ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமை கட்டடத்திற்கு முன்பு தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார். நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு முன்வரவில்லை என்பதோடு, தமிழர்களை அழிப்பதற்கு ஆயுத உதவி செய்தது. தமிழகத்தில் ஈழ உணர்வுள்ள மக்கள் அனைவரும் கொந்தளித்தனர். ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய அரசு சிங்களர்களுக்கு ஆதரவாக தீர்மானத்தில் கையெழுத்திட்டது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களர்களுக்கு ஆதரவாகவும் வாக்களித்து துரோகம் செய்தது.

மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய திருமுருகன் காந்தி அவர்கள் ஆண்டுதோறும் சென்னை கடற்கரையில் ஆயிரக்கணக்கில் தமிழர்களைத் திரட்டி, மடிந்த ஈழத்தமிழர்களுக்காக நினைவஞ்சலி சுடர் ஏற்றும் கடமையைச் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் எமது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலியைச் செய்து வருகிறது.

இந்த ஆண்டும் வரும் 18 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி சுடர்களை ஏந்தி வீரத் தியாகிகளான ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி புகழ் வணக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார். தமிழ் உணர்வாளர்களும், ஈழத் தமிழ் பற்றாளர்களும், மறுமலர்ச்சி திமுக கண்மணிகளும் 18 ஆம் தேதி மாலை 4 மணிக்கெல்லாம் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வருவதற்கும், கட்சி சார்பற்ற ஈழத் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் அதில் பங்கேற்க வேண்டும் என்றும் நான் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaicommemorationMay 18Tamil Eelam genocideVaiko
Advertisement
Next Article