#UttarPradesh | பெண்ணின் தலைக்குள் இருந்த ஊசி… மருத்துவரின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் - நடந்தது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர், தலையில் காயத்துடன் வந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்தபோது, தலைக்குள் ஊசியை தவறுதலாக வைத்துத் தைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிதாரா (18). சிலருடன் ஏற்பட்ட மோதலில் இவரின் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரின் பெற்றோர் அவரை அருகில் இருந்த சமூக நல சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர் அப்பெண்ணிற்கு தலையில் தையல் போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண்ணுக்கு தையல் போட்ட இடத்தில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால், குடும்பத்தினர் அந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு காயமடைந்த பகுதிக்கு ஸ்கேன் செய்தபோது, தலைக்குள் ஊசி இருப்பது தெரிய வந்தது. பின்னர், அப்பெண்ணின் தலையில் இருந்த ஊசி மருத்துவர்கள் அகற்றினர்.
இதனால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து, மறுபடியும் அறுவை சிகிச்சை செய்து, அந்த ஊசியை அகற்றினர். அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மது போதையில் இருந்ததாகவும், அதனால் தான் அவர் ஊசியை மறந்து விட்டதாகவும், பெண்ணின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஹாபூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மது அருந்தவில்லை என்று தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநில அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.