#Uttarpradesh | ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோ! ஆனால் அவருக்கு காத்திருந்த சோகம்!
உத்தர பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த தீவிபத்தின்போது உயிரை பணயம் வைத்து 7 குழந்தைகளை காப்பாற்றிய யாகூப் மன்சூரியின் 2 குழந்தைகள் காப்பாற்ற முடியாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவான என்ஐசியூ செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 15-ம் தேதி இரவில் திடீரென்று மருத்துவனையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், என்ஐசியூ சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்த குழந்தைகள் சிக்கினர். இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்றன. மருத்துவமனையில் இருந்தவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
என்ஐசியூவில் மொத்தம் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் 10 குழந்தைகள் உயிரிழந்தன. மேலும் 16 குழந்தைகள் காயமடைந்தன. அந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தீவிபத்து ஏற்பட்டபோது அங்கு இருந்த யாகூப் மன்சூரி என்பவர் ஏராளமான குழந்தைகளை காப்பாற்றியுள்ளார். தீவிபத்தில் சிக்கிய குழந்தைகளை உயிரை பணயம் வைத்து அவர் காப்பாற்றினார். இதனால் அவர் ஹீரோவாக பார்க்கப்பட்டார். இதற்கிடையே தான் பல குழந்தைகளை காப்பாற்றிய அவரின் 2 குழந்தைகள் தீவிபத்தில் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
யாகூப் மன்சூரி ஹமிர்பூரை சேர்ந்தவர். அவர் உணவு பொட்டலங்கள் வியாபாரம் செய்து வருகிறார். தீவிபத்து ஏற்பட்ட தினத்தில் அவரது மனைவி நஸ்மாவிற்கு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகள் மருத்துவமனையில் என்ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. யாகூப் மன்சூரி என்ஐசியூவின் வெளிப்புறத்தில் படுத்து கிடந்தார். இந்த வேளையில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அவர் கண்ணாடிகளை உடைத்து பல குழந்தைகளை காப்பாற்றினார்.
ஆனால் அவரது குழந்தையை அவர் மீட்கவில்லை. வேறு யாராவது தனது குழந்தையை மீட்டு இருப்பார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் அவரது 2 குழந்தைகளையும் யாரும் மீட்கவில்லை. தீவிபத்தில் சிக்கி யாகூப் மன்சூரியின் 2 குழந்தைகள் உயிரிழந்தது மறுநாள் தெரியவந்துள்ளது. இதனைகண்ட யாகூப் மன்சூரி மற்றும் அவரது மனைவி நஸ்மா ஆகியோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு நியாயம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் யாகூப் மன்சூரி. எங்களது குழந்தைகளின் இறப்புக்கு நியாயம் வேண்டும் அவ்வளவுதான் என்றார் தழுதழுத்த குரலில் அவர்.