#Uttarpradesh | 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி - அலேக்காக பிடித்து தூக்கி காப்பாற்றும் வீடியோ!
உத்தரபிரதேசத்தில் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நபரை அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உத்தரபிரதேசம், நொய்டாவின் செக்டார் 74-ஐ சேர்ந்த ஒருவர், சூப்பர்டெக் கேப் டவுன் சொசைட்டியில் உள்ள உயரமான மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். சரியான நேரத்தில் அருகில் இருந்த நபர்கள் அங்கு சென்றதால் அந்த நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவில், அந்த நபர் உயரடுக்கு கட்டிடத்தின் 14வது மாடியின் பால்கனியில் வெளிப்புற பக்கவாட்டை பிடித்து தொங்கிய நிலையில் இருந்தார். தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் இருந்த அவரது நடவடிக்கையை கண்ட, அக்கம்பக்கத்தினர் கத்தி கூச்சலிட்டனர். அதனை கேட்ட அருகில் இருந்த இருவர் விரைந்து சென்று, தொங்கிக் கொண்டு இருந்த நபரை குண்டுக்கட்டாக பிடித்து மேலே இழுத்து உயிரை காப்பாற்றியுள்ளனர்.
அந்த குடியிருப்பைச் சேர்ந்த சிலர், அந்த நபரின் தற்கொலை முயற்சியை செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. இதையடுத்து தற்கொலைக்கு முயன்ற நபரிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நொய்டாவில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம், நொய்டா அடுக்குமாடி குடியிருப்பின் 28வது மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் குதிக்க முயற்சிப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகின. அதில், ஒரு போலீஸ் அதிகாரி விரைந்து செயல்பட்டு அந்த நபரின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினார். இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.