உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் 16-வது நாளாக தவிக்கும் 41 தொழிலாளர்கள்! எப்போது மீட்கப்படுவார்கள்?
உத்தரகாண்ட் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்காக மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக துளையிடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது 86 மீட்டர்களில் 31 மீட்டர் துளையிடும் பணி முடிவடைந்துள்ளது.
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்தது. இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து 60 மீட்டர் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன. துளையிடும் 25 டன் எடைக் கொண்ட ஆகர் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடர்வதில் சிக்கல் நிலவியது.
பின்னர் விரிசல் சீர் செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புப் பணிகள் முழுவதுமாக முடங்கியது.
மீதமுள்ள 10-12 மீட்டர் தொலைவுக்கு பணியாளர்களே நேரடியாக குழாயைச் செலுத்துவதற்கு இயந்திரத்தின் பிளேடை அகற்றுவது அவசியமாகிறது. இந்தப் பணியை மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் கட்டுமானப் படைப்பிரிவைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் இருந்து சம்பவ இடத்துக்கு சென்றடைந்தனர்.
இதையும் படியுங்கள்: 46-வது பிறந்த நாள் – பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
ராணுவ வீரர்களால் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகர் இயந்திரம் பிளாஸ்மா கட்டர் மூலம் முழுமையாக வெட்டப்பட்டுள்ளது. ஆகர் இயந்திரத்தின் முன் பகுதி பைப்லைனில் சிக்கியுள்ளதால் இயந்திரத்தின் முன்பகுதி மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருவதாகவும், குழாயின் கடைசிப் பகுதியின் 2 மீட்டர் பகுதியும் (அதாவது 48 முதல் 50 மீட்டர் வரை) முறுக்கப்பட்டுள்ளதாகவும், குழாயின் 2 மீட்டர் பகுதியை வெட்டி அகற்றுவதும் பெரும் சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மலைக்கு மேலே இருந்து செங்குத்தாக 86 மீட்டருக்கு குழாயைச் செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான மாற்றுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துளையிடும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வேகமாக நடைபெற்று வருகின்றன. முதல் நாளில், 19 மீட்டர் ஆழத்துக்கு துளையிடப்பட்டது. தற்போது 86 மீட்டர்களில் 31 மீட்டர் தோண்டும் பணி முடிவடைந்துள்ளது.
மேலும், செங்குத்தாக துளையிடும் பணிகள் எந்த இடையூறும் இல்லாத சூழலில், நவம்பர் 30-ம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், 41 தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதே எங்கள் முதல் இலக்கு என்று தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. இந்தப் பாதையில் குறுக்கே உள்ள பாறைகளின் தன்மையைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.