உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து - இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மீட்பு பணிகள்!
உத்திரகாசி சுரங்க பாதை விபத்தின் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள 41 தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்பட உள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. 41 தொழிலாளர்களை மீட்க மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு 10-வது நாளாக ஈடுபட்டு வருகிறது.
மேலும், அவர்களுக்கு குழாய் வழியாக உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, மீட்புக் குழுவினர், தொழிலாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய விடியோ காட்சிகள் வெளிவந்தது. தொழிலாளர்கள் நலமாக இருப்பதை கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், மீட்புக் குழுவினர் வாக்கி-டாக்கி மூலம் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளிகளுடன் பேசும் விடியோ வைரலாகியுள்ளது.
இந்த நிலையில், மொத்தம் உள்ள 57 மீட்டரில் 45 மீட்டர் தொலைவுக்கு துளையிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வெளியே வர வசதியாக, அந்த இடம் வரை கனமான குழாய்கள் இடிபாடுகளுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுள்ளது.
துளையிடும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உத்தர்காசியில் 41 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.