உத்தரபிரதேசம் - கல்குவாரி இடிந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு!
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியின் உள்ளே பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குவாரியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே வழக்கம்போல் கடந்த நவம்பர் 16 ம் தேதி காலை தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் 16 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக நடைபெற்ற மீட்புப்பணியில் 7 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பாறை இடிபாடுகளை அகற்ற முடியாததால் மீட்புப்பணிகள் கைவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் எஞ்சிய 8 பேரின் உடல்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில் எஞ்சிய 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.