உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
மழை காரணமாக நான்கு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் நீலகிரி மாவட்டம்
உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த மலை ரயில் அடர்ந்த காட்டுக்குள்ளும் மலை முகடுகளுக்கு நடுவேயும் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது.
மே 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டு, சேதம் அடைந்த ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா – அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
இதனையடுத்து பணிகள் முடிவுற்று ரயில் தண்டவாளம் பாதைகள் சீரானதால் நான்கு நாட்களுக்குப் பிறகு, இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு மலை ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கு புறப்பட்ட ரயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பயணித்தனர்.
நான்கு நாட்களுக்குப் பிறகு மலை ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டதால் முன்பதிவு செய்து சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இந்த மலை ரயிலில் பயணித்தனர்.