கொலம்பிய அதிபரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா..!
அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் ஐநா சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்த கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ நியூயார்க்கில் ஒரு பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், "பாலஸ்தீனத்தை விடுவிப்பதை முதல்பணியாக கொண்ட ஒரு உலக மீட்புப் படையை உருவாக்க வேண்டும். அதனால் அமெரிக்க இராணுவத்தில் உள்ள அனைத்து வீரர்களையும் மனிதகுலத்தை நோக்கி தங்கள் துப்பாக்கிகளை நீட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். "ட்ரம்பின் கட்டளையை மீறுங்கள். மனிதகுலத்தின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள். முதல் உலகப் போரில் நடந்தது போல, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள மக்கள், தங்கள் துப்பாக்கிகளை மனிதகுலத்தை நோக்கி அல்லாமல், கொடுங்கோலர்கள் மற்றும் பாசிஸ்டுகளை நோக்கி நீட்ட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அதிபர் பெட்ரோவின் பேச்சுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் கொலம்பிய அதிபர் பெட்ரோவின் விசாவையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கொலம்பிய தலைநகரான பொகோட்டாவில் தரையிறங்கிய அதிபர் பெட்ரோ இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
" எனக்கு எதிரான அமெரிக்க அரசின் நடவடிக்கைளின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளை அமெரிக்கா மீறுகிறது. அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் ஐநா மன்றத்தில் கலந்து கொள்ளும் உரிமை உள்ளது. இதனை அமெரிக்க அரசாங்கம் நிபந்தனைக்கு உட்படுத்த முடியாது. பாலஸ்தீன இனப்படுகொலையை ஆதரிக்க வேண்டாம் என்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளிடம் கேட்டதற்காக எனது விசா ரத்து செய்யப்பட்டது, அமெரிக்க அரசாங்கம் இனி சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியூயார்க்கில் தொடர்ந்து இருக்க முடியாது. " என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு அமெரிக்கா விசா மறுத்ததை அடுத்து, அவர் ஐ.நா. பொதுச் சபையில் காணொளி வாயிலாக கலந்து கொண்டார் என்றது குறிப்படதக்கது.