சீனப் பொருட்கள் மீதான வரியை 10% குறைத்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கான வரியை உயர்த்தினர். இது உலக அளவில் வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கோண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரியாவில் நடைபெறும் ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளவதாக அங்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தென்கொரியாவில் உள்ள புசான் நகரில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் நடந்த இச்சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்புக்கு பிறகு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ”சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைக்கப்படும். அடுத்த கட்ட பேச்சுவார்தைகளுக்காக வருகிற ஏப்ரல் மாதம் சீனா செல்கிறேன். அதன் பின்னர் சீன அதிபரும் அமெரிக்காவிற்கு வருகிறார். இனி பெரிய தடைகள் எதுவும் இல்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய ஜி ஜின்பிங், "சீனா மீதான வரி, 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். சீனா உடனடியாக அமெரிக்காவிலிருந்து சோயாபீன்ஸ் வாங்கத் தொடங்கும். மிகப்பெரிய பிரச்னையாக இருந்த, அரிய வகை மண் ஏற்றுமதி பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது. இனி சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு மண் ஏற்றுமதியில் எந்தத் தடைகளும் இருக்காது" என்று தெரிவித்தார்.
.
 
 
            