அதிமுகவுடன் கூட்டணி - பிரேமலதாவிடம் நிர்வாகிகள் மீண்டும் வலியுறுத்தல்!
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் மாவட்ட செயலாளர்கள் மீண்டும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. விரைவில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் சுழல் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்ற முனைப்போடு கட்சித் தலைமைக்கு பல்வேறு வழியில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். எனவே தமிழகம் முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திமுகவை பொருத்தவரை, தன்னுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு , 2வது கட்ட பேச்சுவார்த்தையையும் ஆரம்பிக்க போகிறது .இப்போதைக்குக் கூட்டணியில் பலமாகவும், வேகமாகவும் உள்ளது திமுக என்றே சொல்லலாம்.
ஆனால், அதிமுக, பாஜகவில் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. இவர்களுடன் ஏற்கனவே கூட்டணியிலிருந்த ஜிகே வாசன் போன்ற தலைவர்கள், அதிமுக, பாஜக என யார் பக்கம் செல்வது என தெரியாமல் குழம்பி உள்ளனர். அத்துடன், தேமுதிக தற்போது வரை எந்த கூட்டணியில் இடம்பெற உள்ளது என்பது கேள்வியாகவே உள்ளது.
இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும், சீட் விவகாரத்தில் பெரிய அளவு முரண்பாடு வைக்க வேண்டாம் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பிரேமலதா விஜயகாந்த்திடம் மீண்டும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், அடுத்த வாரத்தில் முறையான பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்க தேமுதிக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.