நாடு முழுவதும் முடங்கிய யுபிஐ பரிவர்த்தனை - தொழில்நுட்ப சிக்கலை சீர் செய்யும் பணி தீவிரம்!
UPI சேவை என்பது மொபைல்களை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் செயல்முறையாகும். இதில் PhonePe, Google Pay, Paytm உள்ளிட்ட மொபைல் செயலிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக கடந்தாண்டில் PhonePe செயலி மூலம் அதிகமான பொதுமக்கள் பண பரிமாற்றம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று(ஏப்ரல்.12) UPI சேவை முடங்கியது . இதனால் Paytm மற்றும் Google Pay பயனர்கள் UPI சேவை பயன்பாட்டில் இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இது UPI சேவைகளில் ஒரு மாதத்திற்கு ஏற்பட்ட நான்காவது தொழில்நுட்பக் கோளாறாகும்.
இது குறித்து UPI உள்கட்டமைப்பை மேற்பார்வையிடும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), இதை சரிசெய்யும் பணியை தீவிரப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக NPCI வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “NPCI தற்போது அவ்வப்போது தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது, இதனால் பகுதி UPI பரிவர்த்தனை நிராகரிப்பு ஏற்படுகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.