உ.பி. இளைஞரை ஒருமுறை மட்டுமே கடித்த பாம்பு.. 7 முறை கடித்ததாக கூறியதன் காரணம் என்ன?
உத்தரப் பிரதேசத்தில் தன்னை 7 முறை பாம்புக் கடித்ததாக இளைஞர் ஒருவர் அளித்த புகாரை விசாரித்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமிழக அதிகாரி இந்துமதி.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பேசுபொருளான ஒரு செய்தி, உ.பி.யை சேர்ந்த விகாஸ் என்பவரை பாம்பு பல முறை கடித்தது என்பது. ஆனால் அவரை ஒரு ஒருமுறை மட்டுமே பாம்பு கடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பத்தேபூர் மாவட்டம் சவுரா கிராமத்தில் வசிப்பவர் விகாஸ் துபே (24). இவர் தன்னை கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்ததாக அம்மாவட்ட ஆட்சியர் சி. இந்துமதியிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரிக்க மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நயன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டார் ஆட்சியர் இந்துமதி. 48 மணிநேர விசாரணைக்கு பிறகு அதன் அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, விகாஸை ஒரே ஒருமுறை பாம்பு கடித்துள்ளது. இதில் ஏற்பட்ட அச்சத்தால் அவருக்கு பாம்பு குறித்த பயம் உருவாகி உள்ளது. இதனால், தன்னை அடிக்கடி பாம்பு கடிக்கும் என்ற எண்ணமும் உருவாகியுள்ளது. இதனால் அவர் 6 முறை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
விகாஸை கடந்த ஜூன் 2-ம் தேதி பாம்பு கடித்துள்ளது. குற்றம் செய்ததற்காக விகாஸை பாம்பு கடித்ததாகவும், அவரை பாம்பு கொல்லாமல் விடாது எனவும் அக்கிராமத்தினர் கூறியுள்ளனர். இது அவரது பயத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் பாம்புக்கடிக்கு சிகிச்சை பெற பணம் இல்லாததால் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த விசாரணை குழுவை அமைத்து நடந்தது என்ன என்பதை அறிந்துள்ளார் மதுரை மாவட்டம் பூலாம்பட்டியை சேர்ந்தவரான ஆட்சியர் இந்துமதி.
அதேபோல 2006 ஆகஸ்ட் மாதம், எட்டாவா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் முன் ஜென்மத்தில் தான் ஒரு பெண் நாகமாக இருந்ததாக கூறினார். அருகிலுள்ள புஜுர் கிராமத்தின் சிவன் கோயில் கிணற்றில் ஆண் நாகத்துடன் வாழ்ந்து வந்ததாக கூறினார். தன்னுடன் சேர்த்து கொல்லப்பட்ட ஆண் நாகம், மீண்டும் இளைஞனாக அதே கிராமத்தில் பிறந்து வாழ்வதாகவும் அவருக்கு முதுகில் மச்சம் இருக்கும் என்று கூறி ஒரு இளைஞனை அடையாளம் காட்டினார். பிறகு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலிப்பதும் கவுரவக் கொலைக்கு அஞ்சி திட்டமிட்டு நாடகம் நடத்தியதும் தெரியவந்தது.