#Foodproducts நுண்ணிய நெகிழி துகள்கள்: புத்தாக்கத் திட்டம் அறிமுகம்!
நம்பகமான தரவை உருவாக்க புத்தாக்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்றாடம் பயன்படுத்தப்படும் சர்க்கரை, உப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களில் நுண்ணிய நெகிழித் துகள்கள் (மைக்ரோபிளாஸ்டிக்) இருப்பதை சமீபத்திய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணைய ஆய்வுகள் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், மேலும் நம்பகமான தரவை உருவாக்க புத்தாக்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
உணவுப் பொருள்களில் நுண்ணிய நெகிழித் துகள்கள் மாசுபாட்டால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து சூழலியலாளர்கள் எச்சரித்து வந்தனர். இந்த அச்சுறுத்தலை உணர்ந்து இதில் உடனடி கவனம் தேவை என அறிந்து, ‘நுண்ணிய மற்றும் நானோ-நெகிழித் துகளால் அதிகரித்து வரும் உணவு மாசுபாடுகள், சரிபார்ப்பு பகுப்பாய்வு முறைகளை உருவாக்குதல், வெவ்வேறு உணவு பொருள்களில் பரவலின் அளவை மதிப்பிட்டு புரிந்து கொள்தல்’ என்கிற ஆய்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.
இந்த முதல் நிலை ஆய்வு லக்னெளவில் உள்ள சிஎஸ்ஐஆா்-இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம், கொச்சியில் உள்ள ஐசிஏஆர்-மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் ஆகியவை பகுப்பாய்வு செய்து ஒப்பீடுகளை மேற்கொண்டது.
இதன் வெளிப்பாடு குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சகம் கூறியிருப்பதவது :
"இந்திய உணவில் நுண்ணிய நெகிழித் துகள்கள் மாசுபாட்டை சரி செய்வதற்கான திட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் தொடங்கியது. சர்க்கரை, உப்பு போன்ற பொதுவான உணவுப் பொருள்களில் நுண்ணிய நெகிழித் துகள்கள் இருப்பதை உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (எஃப்ஏஓ) சமீபத்திய அறிக்கை உறுதி செய்கிறது. நுண்ணிய நெகிழித் துகள்களின் உலகளாவிய பரவலை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இதையும் படியுங்கள் : தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நிறைவு | #Trains வழக்கம்போல் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!
இந்நிலையில், இந்திய சூழலில், மனித ஆரோக்கியம், பாதுகாப்பிற்கான தாக்கங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் வலுவான தரவுகள் அவசியம். இதன்படி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவில் நுண்ணிய நெகிழித் துகள்கள் மாசுபாடு குறித்த அதிகரித்து வரும் கவலையை சமாளிக்க ஒரு புத்தாக்கத் திட்டம் ஆகஸ்ட் 18- ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளராக, இந்திய நுகா்வோருக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இத்திட்டத்தை அளிக்கிறது.
உலகளாவிய ஆய்வுகள் பல்வேறு உணவுகளில் நுண்ணிய நெகிழித் துகள்கள் மாசுபாடு இருப்பதை எடுத்துக்காட்டினாலும், இந்தியாவுக்கென குறிப்பிட்ட நம்பகமான தரவை இதன் மூலம் உருவாக்கப்படும். இத்திட்டம் இந்திய உணவில் நுண்ணிய நெகிழித் துகள்கள் மாசுபாடு அளவைப் புரிந்துகொள்ள உதவும். மேலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க பயனுள்ள விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு தரங்களை உருவாக்க வழிகாட்டும். இத்திட்டம் ஒழுங்குமுறை உலகளாவிய நுண்ணிய நெகிழித் துகள்கள் மாசுபாடு குறித்த புரிதலுக்கும் வழிகாட்டும்"
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.