மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலை சந்தித்து திமுக எம்.பி வில்சன் மனு! மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு!
மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலை சந்தித்து திமுக எம்.பி பி.வில்சன் மனு அளித்துள்ளார்.
பாஜகவின் கடந்த ஆட்சியில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்சய சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு:
மத்திய அரசு நிறைவேற்றிய 3 சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் தரப்படவில்லை. குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. 3 குற்றவியல் சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளன. அனைத்து துறைகளுடனும் ஆலோசித்து அமல்படுத்த போதிய கால அவகாசம் தேவை. சட்டங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடபட்டுள்ளன. சட்டத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பது அவசியம். சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசியல் அமைப்பு 348 ஐ மீறுவது ஆகும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதேபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வாலை நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தார்.
இது குறித்து பி.வில்சன் தனது X தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இன்று மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வாலை நாடாளுமன்றத்தில் சந்தித்து, "பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய சாக்ஷய அதினியம் 2023" ஆகிய சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தவும், இந்த மூன்று சட்டங்களின் அவசியம் குறித்து மறுபரிசீலனை செய்யவும் கோரி மனு அளித்தேன். இந்த மூன்று நாடாளுமன்ற சட்டங்களும் 1.7.2024 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.
1860 ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டம், 1973 ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1872 ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றுவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் பல்வேறு மாநில பார் கவுன்சில் உள்ளிட்ட பங்குதாரர்களின் கவலைகளை நான் வெளிப்படுத்தினேன். மேலும், இந்த மூன்று சட்டங்களை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் குறித்தும் அவரிடம் தெரிவித்தேன். இந்த கோரிக்கை மனுவை பரிசீலிப்பதாக மத்திய சட்ட அமைச்சர் உறுதியளித்தார்.
இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.