மத்திய கல்வி அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு! நீட் எதிர்ப்பு குறித்து விவாதித்ததாக தகவல்!
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி தேசிய அளவில் நடைபெற்றது. இதனைத்தொடந்து இத்தேர்விற்கான முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு முறை பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றுமுன் தினம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்றுள்ள ஆளுநர் வரும் ஜூலை 19 ஆம் தேதி மாலை சென்னைக்கு திரும்ப உள்ளார்.
இதையும் படியுங்கள் : தஞ்சை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதி விபத்து: 5 பேர் பலி!
5 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி, நேற்று பிரதமரை சந்தித்துப் பேசினார். மேலும், பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றதற்கும் ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும் ஆளுநர், பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசினார். நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.