சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்!
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு கூடியது, அந்த கூட்டத்திற்கு பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தான் மீது விசா ரத்து போன்ற முக்கியமான நடவடிக்கைகளை எடுத்ததது. அதைத் தொடர்ந்து இன்று(ஏப்.30) மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 2025ம் ஆண்டுக்கான கரும்புக்கான கொள்முதல் விலை குவிண்டலுக்கு 355 ரூபாய் விலை நிர்ணயம் மற்றும் 22,864 கோடி ரூபாய் மதிப்பில் 166.80 கீமி தொலைவுக்கு அதிவேக பசுமைவழி சாலை அமைக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை குழு முடிவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார். இந்த கணக்கெடுப்பு வெளிப்படையான முறையில் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் காங்கிரஸ் கட்சி சாதி கணக்கெடுப்பை எதிர்த்துள்ளதாகவும் சாதி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தியுள்ளதாவம் அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசியபோது, சில மாநிலங்கள் சாதிகளைக் கணக்கிட கணக்கெடுப்புகளை சிறப்பாகச் செய்திருந்தாலும், வேறு சில மாநிலங்கள் அரசியல் கோணத்தில் இருந்து மட்டுமே இத்தகைய கணக்கெடுப்புகளை வெளிப்படையான முறையில் நடத்தியதாக தெரிவித்தார்.