2024-25ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன்முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தது. இந்த கூட்டத் தொடரில் மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வினாத்தாள் கசிவு தொடர்பாக விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய கல்வி அமைச்சரை நோக்கி காரசாரமான கேள்விகளை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். நாட்டின் முக்கியப் பொருளாதார அளவீடுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டிற்கான (2024-25) மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்மூலம் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா முறியடிக்கிறார். அதே நேரத்தில் மொரார்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம்' என்ற இலக்குடன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அம்மாநிலங்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தொடங்க உள்ளார். தனது பட்ஜெட் உரையில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகளையும் நிர்மலா சீதாராமன் பட்டியலிடுவார். இதன் பின்னர் பட்ஜெட்டில் துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.