#Coutrallam வந்த அழையா விருந்தாளி… அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்!
குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்து வரப்பட்ட பாம்பு சுற்றுலா பயணிகள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று குற்றாலம். இங்குள்ள அருவிகளில் குளிக்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டும். இந்த சூழலில், வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து, குற்றாலம் மெயின் அருவியில் நேற்றிரவு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு கொண்டிருந்தனர். அப்போது, கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு ஒன்று அருவியில் இருந்து தண்ணீருடன் சேர்த்து விழுந்தது. ஆண்கள் குளிக்கும் பகுதியில் விழுந்த இந்த கட்டுவிரியன் பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓடினர். பின்னர் இச்சம்பவம் குறித்து தென்காசி தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் அந்த கட்டு விரியன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, வனத்துறையினர் அதனை அடர்வனப் பகுதிக்குள் கொண்டு விட்டனர். இச்சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.