இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை (ஆக. 7) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகள் (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்.) உள்ளன.
இதைத் தவிர, திருவள்ளூா் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்பட 3 பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர மாணவா்களிடமிருந்து 14,500 விண்ணப்பங்களும், தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 3,000 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.