#UKriot இங்கிலாந்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை - 1000பேர் கைது!
இங்கிலாந்தில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடையவர்கள் சுமார் 1000 பேரை இங்கிலாந்து போலீஸ் கைது செய்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் வட மேற்கு பகுதியில் உள்ள சவுத்போர்ட் நகரில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி டான்ஸ் கிளாஸை முடித்துக் கொண்டு வெளியே வந்த சிறுமிகள் மீது மர்ம நபர் ஒருவர் கத்தியால் கொடூரமாக தாக்கியதில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுமிகள் மூன்றுபேரும் 8வயதுக்கு குறைவானவர்கள். இதேபோல அந்த கொடூர தாக்குதலில் மேலும் 10 சிறுமிகள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையின் விசாரணையில் சிறுமிகளை தாக்கிய 17 வயது இங்கிலாந்து சிறுவன் கைது செய்த போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் நாட்டில் வன்முறைகள் முடிவுக்கு வராமல் தொடர்ந்தது.
நாடு முழுவது குடிபெயர்ந்தவர்கள், ஆசியர்கள், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் சமூக வலைதளங்களின் அதிகளவில் பரப்பப்பட்டது. இதேபோல இந்தியர்கள் உட்பட அங்கு குடியேறியுள்ளவர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் பொதுவெளியில் தீவிரமாக பேசப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள், இணையத்தில் இனவெறி கருத்துக்களையும் வெறுப்பையும் பரப்பிய, கலவரத்தோடு தொடர்புடையவர்கள் என சுமார் 1000 பேரை இங்கிலாந்து போலீஸ் கைது செய்துள்ளது. அவர்களில் சுமார் 575 ஓர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக இங்கிலாந்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.