"உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டது" - ரஷ்ய அமைச்சர் ஆண்ட்ரேய் பெலூசொவ்!
உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரேய் பெலூசொவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் வெடித்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரப் போவதாகத் தகவல் வெளியான நிலையில், இதனால் தனது நாட்டிற்கு ஆபத்து எனச் சொல்லி உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்தது. கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது.
இரு நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர மற்ற நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன. இந்நிலையில், உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவ நிலையை நேரில் பாா்வையிட்ட ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்ட்ரேய் பெலூசொவ் , அங்கு பணியாற்றும் வீரா்களுக்கு பதக்கங்கள் அணிவித்தார்.
இதையும் படியுங்கள் : இன்று தொடங்குகிறது ஐபிஎல் வீரர்கள் ஏலம் - #CSK அணியின் மீதத் தொகை, வீரர்கள் மற்றும் விவரங்கள் இதோ!
பின்னர், ரஷ்ய ராணுவ அதிகாரிகளிடையே அவர் பேசியதாவது :
"நமது படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக உள்ளன. உக்ரைனின் மிகச் சிறந்த படைப் பிரிவுகள் அனைத்தையும் நமது வீரர்கள் ஒடுக்கிவிட்டனர். தற்போது நமது படையினரின் முன்னேற்றம் வேகப்படுத்தப்படுகிறது. உக்ரைனின் 2025ம் ஆண்டுக் கனவு தகர்ந்துவிட்டது"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, உக்ரைன் போரின் ஆயிரமாவது தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி ஆற்றிய உரையில், ரஷிய முன்னேற்றத்தை உறுதியுடன் தடுத்து நிறுத்தி 2025-ஆண்டுக்குள் வெற்றிவாகை சூடப்போவதாக சூளுரைத்திருந்தார்.