UGC NET 2024: யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! வெளியான அறிவிப்பு!
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வைக் கருத்தில் கொண்டு தேசிய தகுதித் தேர்வு (நெட்) ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலைக் குழு மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர், பணிக்கான தகுதியையும், இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் நுழைவுத் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று அண்மையில் யுஜிசி தெரிவித்தது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது.
இதையும் படியுங்கள் : பாலியல் புகாருக்கு உள்ளாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி!
2024ஆம் ஆண்டுக்கான ஜூன் மாதம் 16 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களுக்காக (UPSC) மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் நிலைத் தேர்வு ஜூன் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனால், தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜூன் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பை யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.