Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உகாதி பண்டிகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு உகாதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
12:51 PM Mar 29, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு உகாதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

Advertisement

"திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் உகாதி திருநாள் நாளை (30-03-2025) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொழிச் சிறுபான்மையினரை என்றும் மதித்துப் போற்றி அவர்களின் உற்ற தோழனாய் விளங்குவது திமுக அரசு.

உகாதி திருநாளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை அதிமுக ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்டாலும் 2006-ஆம் ஆண்டு அதனை மீண்டும் நடைமுறைப் படுத்தியவர் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர்.

தமிழ் முதலிய திராவிட மொழிகள் பேசும் தென் மாநிலங்கள் அனைத்தும் தொகுதி மறுசீரமைப்பில் தங்கள் குரல் நெரிக்கப்படும், நாடாளுமன்றத்தில் வலிமை குறைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் நமது ஒற்றுமையை மார்ச் 22 அன்று சென்னையில் வெளிப்படுத்தி இருந்தோம். மேலும், அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன. நாடு முழுவதும் நமது முன்னெடுப்புக்குக் கவனமும் ஆதரவும் பெருகி வருகிறது.

இன்று தென்மாநிலங்கள் பொருளாதார ரீதியாக அடைந்துள்ள வளர்ச்சிக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று அரை நூற்றாண்டுக்கு முன்னரே இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் நடத்திய மொழிப் போர்தான். இப்போது மீண்டும் இந்தித் திணிப்பு மூலம் அந்த வளர்ச்சியையும் நமது மொழி அடையாளத்தையும் அழிக்கத் திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேளையில், தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும்.

மொழி இருந்தால் தான் இனம் இருக்கும். தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். இதையே எனது உகாதி புத்தாண்டுச் செய்தியாக, கோரிக்கையாக உங்கள் முன்வைக்கிறேன்.

அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், வண்ணக்கோலம் என எழுச்சியோடு புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உகாதி திருநாள் நல்வாழ்த்துகள். நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக இந்த உகாதி திருநாள் அமையட்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CHIEF MINISTERgreetingsMKStalinUgadi festival
Advertisement
Next Article