“நான் வைக்கும் ஒவ்வொரு தேர்விலும் உதயநிதி சென்டம் ஸ்கோர் செய்கிறார்” - முதலமைச்சர் #MKStalin பேச்சு!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்ட்டிலும் சென்டம் ஸ்கோர் எடுக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முத்தமிழ் அறிஞர் குழு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘என் உயிரினும் மேலான..’ என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சு போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பரிசுகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், முத்தமிழறிஞர் பதிப்பகம் சார்பில் 9 நூல்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,
“என் உயிரினும் மேலான.. எனும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது நான் அளவில்லா பெருமை அடைந்தேன். இந்த பேச்சு போட்டி வெற்றியாளர்களை தேர்வு செய்ய மட்டுமல்ல, திராவிட முன்னேற்றத்தின் கருத்தியல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் இளைஞர்களுக்கு பட்டை தீட்டும் பயிற்சி பட்டறை. இதை நான் கட்டி எழுப்பிய இளைஞரணி நடத்தியது என்பதுதான் என் பெருமைக்கு காரணம்.
திமுக பேசிப்பேசியே வளர்ந்தவங்க என்று சொல்வார்கள், நாங்கள் பேசியதெல்லாம் வெறும் அலங்கார அடுக்கு மொழிகள் அல்ல. உலகில் நடக்கும் கொடுமைகளை, மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனம், அடிமைத்தனத்தை பேசினோம். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் என்று பழந்தமிழ் இலக்கியங்களை பாமர மக்களுக்கும் கொண்டு சென்றவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி.
பேச்சுக்கள் மிக மிக வீரியமிக்கது. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று வள்ளுவர் சொன்னது படி இளைஞர் அணி செயலாளர் உதயநிதியிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தேன். இது பதவியல்ல பொறுப்பு. என்னை பொறுத்தவரை அந்த பொறுப்பை அவருக்கு கொடுத்தது. நான் வைக்கும் ஒவ்வொரு டெஸ்ட்டிலும் சென்டம் ஸ்கோர் எடுக்கிறார். நீட் தேர்வுக்காக கையெழுத்து இயக்கம், நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட ஏராளமான பணிகளை செய்து வருகிறார். திமுகவால் தமிழ்நாடு வளரனும் என்ற லட்சியப் பாதையில் இளைஞர் அணி செயல்படுகிறது.
ஒரு லட்சம், 75 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகைகளை வென்ற மூவர் பெற உள்ளனர். போட்டியில் பங்கேற்ற 17 ஆயிரம் பேருமே பாராட்டுக்கு உரியவர்கள் தான். கட்சித் தலைவர் என்ற முறையில் உரிமையோடு சொல்லிக் கொள்ள விரும்புவது, இனி திமுக சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் இந்த 182 பேச்சாளர்களையும் பேச வைக்க வேண்டும். இவர்கள் எதிர்கால திராவிட இயக்கத்தின் தலைமுறைகள். நானும் உங்களை போல் மேடையில் பேசிப்பேசி வளர்ந்தவன் தான். இப்போது உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.
எனக்கு 18 வயது இருந்த பொழுது கல்லூரி மாணவராக மேடையில் இருந்தேன். மாநாட்டில் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான மாநாட்டில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள், எந்த தியாகத்தையும் செய்ய தயார், என் தந்தைக்கு 4 பிள்ளைகள் உள்ளோம், என் ஒருவனை இழப்பதால் அவர் வருந்தமாட்டார் என்று சொன்னேன். மறக்க முடியாத நினைவுகள். ஸ்டாலினையும் சேர்த்து 4 பிள்ளைகளை தர தயாராக உள்ளேன் என்று என் தந்தை கருணாநிதி பேசினார். உணர்ச்சி பிழம்பாக இருந்த மாணவர்கள் மத்தியில் நீங்கள் ஏழை மாணவர்களும் இருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தை நீங்கள் பார்க்க வேண்டும்” இவ்வாறு பேசினார்.