கேரள கன்னியாஸ்திரிகள் இருவர் சத்தீஸ்கரில் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
சத்தீஸ்கரில், கேரளவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “சத்தீஸ்கரில் இரண்டு கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் குறிவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் - இது நீதி அல்ல, இது ஒரு ஆபத்தான போக்கை பிரதிபலிக்கிறது. மேலும் இந்த ஆட்சியின் கீழ் சிறுபான்மையினரை திட்டமிட்டு துன்புறுத்த படுகின்றனர். மத சுதந்திரம் என்பது அரசியலமைப்பு அளித்துள்ள சட்ட உரிமை. அதனால், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் பல்வேறு தரப்பினரும் இந்த கைதுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
”சத்தீஸ்கரில் பஜ்ரங் தள் இந்து அமைப்பால் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தல் மற்றும் பொய் குற்றச்சாட்டுகலுக்கு ஆளாகியிருப்பது கவலையளிக்கிறது; இது அரசின் செயலற்ற தன்மையால் செயல்படுத்தப்பட்ட வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தை பிரதிபலிக்கிறது; இந்தியாவின் சிறுபான்மையினர் பயத்திற்கு அல்ல, சுய மரியாதைக்கும் சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள்”
என்று தெரிவித்துள்ளார்.