#TVK மாநாடு - வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை!
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்குச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில், கட்சிக்கான கொடியும், கொடிப் பாடலும் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி மாநாட்டுப் பகுதி அமைந்துள்ள இடத்தில் கடந்த 4-ஆம் தேதி பந்தல்கால் நடுதலுடன் மாநாட்டுப்பணிகள் தொடங்கின .
மாநாட்டின் முகப்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை மதில் சுவர் வடிவத்தில் எண்ம பதாகைகள் அமைத்து, அதன் மேற்பகுதி யில் மிகப்பெரிய அளவிலான விஜயின் உருவப்படம் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, பெரியார், காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள், சேர, சோழ, பாண்டியர்களின் எண்ம பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுத் திடலை ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து, அவற்றில் தலா 1,500 பேர் அமரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, நாற்காலி போடப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு தனியே இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்குச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் தவெக சார்பில் தனி வழித்தடம் கோரப்பட்டதாகவும் தெரிகிறது. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து 4 கி.மீட்டர் தூரத்துக்குதனியாக ஒருவழித்தடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் இந்த வழியில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.