#TVK மாநாடு - தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்!
தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் அக்.27ம் தேதிக்கு நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 பெண்கள் உட்பட 7 பேர் தற்காலிக பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற 27.10.2024 அன்று விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், சட்டமன்றத் தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித்தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்."
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.