தூத்துக்குடி: மூன்று நாட்களாகியும் தனித்தீவுகளாக காட்சியளிக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள்!
தென்மாவட்டங்களில் கனமழை குறைந்தபோதும், மூன்று நாட்களாகியும் தூத்துக்குடியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சியளிக்கின்றன. அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே சிரமப்படுகின்றனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தலைவன் வடலி, கீரனூர், தண்ணீர் பந்தல், நரசன்விளை, சேர்ந்தபூமகளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளப்பெருக்கால் தனித்தீவுகளாக காட்சியளிக்கிறது. மழை நின்று இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையிலும் கூட தாமிரபரணியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இந்த கிராமங்கள் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளன.
எனினும், பொதுமக்கள் பாதுகாப்பாக உள்ள நிலையிலும் கூட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். ஆற்றில் வெள்ளம் குறைந்தால் மட்டுமே இந்த பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.