#Turkey ஹோட்டல் தீ விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்வு!
துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில், சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதி அமைந்துள்ளது. தற்போது துருக்கியில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளதால் இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இந்த ஹோட்டலில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஹோட்டலில் 234 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. தீ மளமளவென எரிந்து மற்ற பகுதிகளுக்கு பரவியதை அடுத்து அறைகள் முழுவதும் புகை சூழ்ந்தது.தீயிலிருந்து தப்பிக்க பலர் மேல் தளங்களில் இருந்து கயிறு, பெட்ஷீட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கீழே இறங்கினர். சிலர் பயத்தில் கீழே குதித்ததில் படுகாயமடைந்த இருவர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையை வழிநடத்த 6 வழக்கறிஞர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.